ஆட்டநாயகன் (AATANAYAGAN) 2010 - திரை விமர்சனம்
நடிப்பு: ஷக்தி, ரம்யா நம்பீசன், சந்தானம், நாசர், ஆதித்யா, மீரா வாசுதேவன், ரவிகாளே
இயக்கம்: கிருஷ்ணா ராம்
தயாரிப்பு: லட்சுமி மூவி மேக்கர்ஸ்
இசை: ஸ்ரீகாந்த் தேவா
ஒளிப்பதிவு: எஸ்.டி.விஜய்மில்டன்
நாசர் குடும்பத்தின் மூத்த மகன் ஆதித்யா, ஐதராபாத்தில் ஐ.டி. கம்பெனி நடத்திக் கொண்டிருக்கிறார். இளையமகன் ஷக்தி உள்ளூரில் வெட்டி ஆபீசர் வேலை பார்க்கிறார். இதனால் வீட்டில் அனைவரும் ஷக்தியை உதவாக்கரை என்று அர்ச்சனை பண்ணுகிறார்கள். அவருக்கு ரம்யா நம்பீசனோடு காதல். திருமணமாகாமல் இருக்கும் அக்கா மீரா வாசுதேவனுக்கு திருமணம் நடந்தால்தான் இவர்கள் திருமணத்துக்கு பச்சைக்கொடி காட்டப்படும் சூழ்நிலை. இந்த நிலைமையை தன் அண்ணனுக்கு தெரியப்படுத்துகிறார் ஷக்தி. அதுவரை திருமணம் வேண்டாம் என்று தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தவர், தம்பியின் காதலுக்காக மீராவைத் திருமணம் செய்கிறார்.
திருமணத்துக்கு பிறகு அக்காவை காண ரம்யாவும் அண்ணனை காண ஷக்தியும் ஐதராபாத் வருகிறார்கள். வந்த இடத்தில் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. ஆதித்யா ஐ.டி கம்பெனி நடத்தவில்லை; அடிதடி கம்பெனி நடத்துகிறார் என்கிற உண்மை தெரியவருகிறது. தன் காதலுக்காக தன் காதலியின் அக்கா வாழ்க்கையை சீரழித்து விட்டோமே என்ற குற்ற உணர்ச்சி உந்தித் தள்ள அண்ணணை திருத்தி, அவரது எதிரிகளையும் சமாளிக்கப் புறப்படுகிறார் ஷக்தி. அது எப்படி சாத்தியமானது என்பது மீதிக் கதை.
ஷக்தி முதன் முதலாக ஆக்ஷன் முன்னோட்டம் விட்டிருக்கிறார். முதல் பகுதியில் சந்தானத்தோடு கலகலப்பான காமெடி கிரிக்கெட் ஆடிவிட்டு, பிற்பகுதியில் படா படா தாதாக்களோடு ஆக்ஷன் பாக்சிங் விளையாடுகிறார். வீட்டுக்கு அடங்காத பிள்ளையாக நடிக்காத ஹீரோக்களே இல்லைஎன்றபோதும், அந்த கேரக்டருக்கே உரித்தான தோற்றமும், தெனாவட்டு பேச்சும் ஷக்திக்கு பிளஸ். செலவுக்கு பணம் தராத அப்பாவிடம் பணம் பறிக்க, வீட்டில் உள்ள எலெக்ட்ரானிக் பொருட்களின் வயர்களை பிடுங்கி விட்டு, அதை அரைகுறை மெக்கானிக் பவர் பாண்டியை விட்டு சரி செய்ய சொல்வது, சந்தானத்துக்கு பெண்பார்க்க சென்று விட்டு ரம்யா நம்பீசனிடம் பஜ்ஜி, காபி குடித்ததற்கு பில் வாங்குவது, தும்மலில் தொடங்கும் காதல் வரை எல்லாமே (சிறுபிள்ளைத்தனமாக இருந்தாலும்) சுவாரஸ்யமானவை. நாசர் வழக்கம்போல பெற்ற பிள்ளையை புரிந்து கொள்ளாத அப்பா.
அண்ணன் ஆதித்யா ஆச்சர்யப்படுத்துகிறார். அவர் திடீரென திருந்துவதும், ஆந்திரா டி.ஜி.பி ஷக்தியின் பேச்சை கேட்டு நடப்பதும், அண்ணனின் ஆட்களே அவரை போட்டுத் தள்ள முயற்சிப்பதும், பிற்பகுதியில் சந்தானம் இல்லாத குறையை போக்கும் சீரியசான காமெடிகள்.
ரம்யா நம்பீசனுக்கு காதலோடு கொஞ்சம் நடிக்கவும் வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள். ‘அண்ணனும் தம்பியும் சேர்ந்து எங்க அக்காவை உயிரோடவாவது கொடுத்தீங்களே’ என்று அவர் ரயில் நிலையத்தில் கதறும்போது கரைய வைக்கிறார். சீரியல்களில் அழுது முடித்த கையோடு சினிமாவுக்கு வந்திருக்கிறார் மீரா வாசுதேவன். விஜய் மில்டனின் கேமராவும், ஸ்ரீகாந்த் தேவாவின் ஆர்மோனிய பெட்டியும் ஆட்டநாயகனை ஆட வைத்திருக்கிறது.
Category: THIRAI VIMARSANAM
0 comments